பின்னங்காலில் எழுந்து நின்றால் 6 அடி 5 அங்குலம் (ஏறத்தாழ 2 மீட்டர்) இருக்கும்! இதன் நிறையோ 276 இராத்தல் (125 கிலோ)! சாதாரணமாக இது எழுந்து நின்றால் ஏறத்தாழ 50 அங்குலங்கள் (1.27 மீட்டர்) இருக்குமாம் - பாதத்திலிருந்து தலை வரை. மார்பு அளவு 59 அங்குலங்கள் (1.5 மீட்டர்). 29
அங்குல (74 செண்டிமீட்டர்) கழுத்து. குதிரைகளுக்குப் பயன்படுத்தப்படும் மேலங்கிகளைத்தான் குளிர், மழைக்காலத்தில் இதற்கும் பயன்படுத்த வேண்டும். இதன் பாதம் ஒரு சாப்பாடுத் தட்டளவு பெரியது.

உண்மையிலேயே ஓர் அரக்கன் தான். இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பாரிய நாய்தான் பிரிட்டனில் மிகப் பெரியதாம்.
பெயர்: ஸாம்சன்.
இதற்குத் தீனி போட மட்டும் மாதம் 60 பவுண்டுகள் செலவாகிறதாம். ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் இரண்டு மைல்
நடை கூட்டிச் செல்ல வேண்டுமாம். இந்த நாயைக் ஆறு மாதக்குட்டியாக வாங்கியபோதே 226 இராத்தல் நிறை இதற்கு. இவன் எப்படி உருவானான்? நியூஃபண்ட்லாண்ட் இன அப்பாவுக்கும் கிரேட் டேய்ன் இன அம்மாவுக்கும் நடந்த கள்ளக் காதலில் வந்து உதித்தவன் இவன். இப்போது இவனுக்கு மூன்று வயதாகிறது.

நியூஃபண்ட்லாண்ட் இன நாய்கள் பெயர் சுட்டுவது போல கனடாவில் 1700களில் உருவாயின. பெரிய அளவான இந்த நாய்கள் பண்ணைகளில் வேலை செய்யப் பயன்படுத்தப்பட்டன. என்னென்ன வேலைகளை இவை செய்ய வல்லன? பாதுகாத்தல், மாடுகளை மான்களை ஒன்றாக ஓரிடத்தில் ஒடுங்கவைத்தல்,
சிறிய வண்டிகளை இழுத்தல்,
வேட்டையாடுதல், நீரினுள்ளிருந்தோ மலைகளிலோ ஆபத்திலிருந்து மனிதரைக் காப்பாற்றுதல் போன்றவை. கிரேட் டேய்ன் இன நாய்கள் 1400களில் ஜேர்மனியில் தோன்றின (பெயரைப் பார்த்து டென்மார்க்கிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று எண்ணாதீர்கள்). மிகப் பெரியளவு வளரக்கூடிய நாய்கள் இவை. நியூஃபண்ட்லாண்ட் இன நாய்கள் செய்யக்கூடிய அத்தனை பணிகளையும் இந்த கிரேட் டேய்ன் இன நாய்களும் செய்யக்கூடியன. ஆக இந்த இரண்டும் சேர்ந்து உருவான இந்த ஸாம்சன் இத்தனை பாரிய அளவில் வளர்ந்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

இவ்வளவுக்கும் இவன் நல்லவனாம். யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதாவன். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை: இவனது உறட்டை ஒலியைத் தாங்க முடியவில்லையாம்.



நியூஃபண்ட்லாண்ட் இன நாய் மற்றும் கிரேட் டேய்ன் இன நாய்
படங்கள்: இணையத்திலிருந்து