கார்பன் வணிகம்

கார்பன் என்பது, நிலத்தடி கிடைக்கின்ற நிலக்கரி, எண்ணெய், நில வாயு போன்ற எரிபொருள்களிலுள்ள முக்கிய மூலகங்களில் ஒன்று. இந்த எரி பொருள்கள் பல தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளில் நடப்பது போல எரிக்கப்படும் போது ஆக்ஸிசனுடன் சேர்ந்து, கார்பன் டை ஆக்சை-டையும் நீராவியையும் உருவாக்கும். மின்சார உற்பத்திக்கோ அல்லது தொழிற்சாலைகளின் சக்தித் தேவைக்கோ (உதாரணமாக கண்ணாடித் தொழிற்சாலை, சீமெந்துத் தொழிற்சாலை) அல்லது வீட்டில் சமையல் மற்றும் வீட்டை சூடாக வத்திருப்பதற்கோ அல்லது கார் போன்ற வாகனங்களிலோ இந்த எரிபொருள்கள் நாள்தோறும் பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றன. இதில் வெளியாகும் கார்பன் டை ஆக்சைட் தான் வளி மண்டலத்தினுள் சென்று பூமியிலிருந்து தெறித்து வெளியே போகும் சூரியனுடைய வெப்பத்தின் ஒரு பகுதியை அவ்வாறு போக விடாது தடுக்கிறது. இதனால் பூமியின் வெப்பநிலை ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே போவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, கடல் நீரின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே போகிறதாம். இதன் மூலம் காலநிலையும் முற்று முழுதாக மாறி வருகிறதாம்.

வேறு வகையான வாயுக்களும் வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமாக இருந்தாலும், கார்பன் டை ஆக்சைட்டுத்தான் மிக முக்கிய-மானது. எழுபது வீதம் இந்த வாயுதான் காரணம். தாவரங்கள் போன்றவை அழுகும்போது வெளிவரும் மீதேன் வாயுவும் (நாமோ மிருகங்களோ வெளி விடும் வாயுவும் இதுதான் என்கிறீர்களா? அதுவும் சரி தான்) வெப்பநிலை அதிகரிப்பைத் தூண்டுகிறதுதான்.

இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு, ஏறத்தாழ 180 நாடுகள் சேர்ந்து, 1997ம் ஆண்டு ஜப்பானின் க்யோட்டோ நகரில் ஓர் ஒப்பந்ததிற்கு வந்தனர். அதன்படி, தொழில் மயமாக்கப் பட்ட நாடுகள் 2008ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை தங்களது கார்பன் டை ஆக்சைட் உருவாக்கத்தை 1990ம் ஆண்டு இருந்த நிலையை விட 5.2% குறைப்பதாக இந்நாடுகள் ஒப்புக் கொண்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தத்-தின் போதுதான் 'கார்பன் வணிகம்' என்ற உபாயம் உதித்தது.

கார்பன் வணிகம் என்றால் என்ன? பங்கு சந்தையில் பண்டங்கள் மற்றும் செக்கியூரிட்டிகள் வாங்கி விற்கப் படுதல் போன்றதே இந்த வணிகம். கார்பனுக்கு (அதாவது கார்பன் டை ஆக்சைட்டுக்கு) ஒரு பெறுமதி வழங்கப் படும். மக்களோ, நிறுவனங்களோ அல்லது நாடுகளோ கார்பனை வாங்கவோ விற்கவோ முடியும். ஒரு நாடு கார்பனை வாங்கினால், அந்த அளவுக்கு அந்த நாடு கூடுதாலாக எரிபொருளை எரிக்கலாம். அதே போல இன்னொரு நாட்டுக்குத் தேவையானதை விட அதிக கார்பன் கையிருப்பில் இருக்குமாயின், அந்த நாடு அதை விற்கலாம். ஆகவே, இது நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் இரண்டு வழிகளைக் கொடுக்கிறது: ஒன்று கார்பனைக் குறைப்பதற்கான வழிமுறைகளில் பணத்தைச் செலவிட்டு கார்பனை கட்டுப்படுத்தல்; இரண்டு வேறு யாருக்காவது பணத்தைக் கொடுத்து (கார்பன் வணிகம் மூலம்) அவர்களது கார்பன் உற்பத்தியை குறைப்பித்தல்.

2005ம் ஆண்டில் நடந்த கார்பன் வணிகத்தின் பெறுமதி 1000 கோடி அமெரிக்க டாலர்களாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது. இந்தக் கார்பன் வணிகம் விரிவடையும் போது, ஏழை நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் 2500 கோடி அமெரிக்க டாலர் வரை ஆண்டு தோறும் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறதாம்.

இதெல்லாம் சரிதான், கார்பன் வணிகம் வெப்பநிலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துமா என்று கேட்கிறீர்களா? பதில் எவருக்கும் இன்னும் தெரியவில்லை. அடுத்த ஆண்டிலிருந்து தான் புதிய தரவுகளை வைத்து இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

0 :