புதிய வெம்பிளி ஸ்டேடியம் - படங்களுடன்

ஒரு வழியாக புதிய வெம்பிளி அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. 1923ம் ஆண்டு வெம்பிளியில் கட்டப்பட்ட அரங்கம் 2000ம் ஆண்டு மூடப்பட்டு, 2002ம் ஆண்டில் இடித்தழிக்கப் பட்டது. 2005இலேயே கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த அரங்கம் இப்போதுதான் முடிக்கப்பட்டுள்ளது. மொத்தச் செலவு? 75,70,00,000 பவுண்டுகள். ஆஸ்திரேலிய கட்டிட நிறுவனமான மல்ட்டிப்ளெக்ஸ் இதை நிர்மாணித்து முடித்திருக்கிறது.


கடந்த மாதம் 17ம் தேதி வெம்பிளி மக்களில் 60,000 பேர் மைதானத்துக்குள்ளே அநுமதிக்கப் பட்டனர். அடுத்ததாக இங்கிலாந்து இளம் கால்பந்து வீரர்கள் (21 வயதிற்குக் குறைந்தோர்) பங்குபற்றும் பந்தயம் ஒன்று நடந்தது. இனி கால்பந்து சங்கக் கோப்பை இறுதிப் பந்தயம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. முதலாவது சர்வதேச பந்தயமாக இங்கிலாந்து-பிரேசில் ஆட்டம் ஜூன் முதலாம் தேதியன்று நடைபெறவுள்ளது.


இதனது சிறப்பம்சம் இதனது பிரமாண்ட வளைவு. 133 மீட்டர்கள் வரை இந்த வளைவு உயர்ந்து நிற்கிறது. 1750 டன்கள் எடையுள்ளது. இதனது விட்டம் ஏழு மீட்டர்கள். ஆக இந்த வளைவுக்கூடாக ஒரு புகைவண்டி போகலாம். 315 மீட்டர்கள் நீளத்திற்கு இந்த வளைவு வைக்கப் பட்டிருக்கிறது. 500 உருக்குக் குழாய்களைக் கொண்டு உருவானது. பாரிய இரு 70 டன் நிறையுள்ள பிணையல்களில் இது பொருத்தப் பட்டிருக்கிறது.


இந்த அரங்கத்தில் 90,000 இருக்கைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. எந்த இருக்கையில் இருந்து பார்த்தாலும் முழு மைதானமும் மறைவின்றித் தெரியும். இதன் கூரை 52 மீட்டர்கள் உயரம் வரை இருக்கிறது. இந்தக் கூரையின் நிறை 7,000 டன்கள்! இம் மைதானத்தின் உள்ளே இரு புறத்திலும் உள்ள பாரிய இரு தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொன்றும் 600 சாதாரண தொலைக்காட்சிப் பெட்டிகளின் அளவு. இதனுள்ளே 2,618 கழிப்பறைகள் இருக்கின்றன.


இதெல்லாம் சரிதான். ஆனால், இதனது வடிவமைப்பு ஏற்கனவே செய்யப்பட்ட ஒரு வடிவமப்பின் நகல் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 1941ம் ஆண்டு பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல கட்டிட நிபுணர் ஒஸ்கார் நீமெயர், பிரேசில் நாட்டு சர்வதேச அரங்கம் ஒன்றை வடிவமைத்தார். அதில் ஒரு பாரிய வளைவை நிறுவி வடிவமைத்தார். இந்த அரங்கம் கட்டப்படவேயில்லை. நோர்மன் ஃபொஸ்டர் வடிவமைத்த இந்த வெம்பிளி அரங்கம் ஏறத்தாழ அதை ஒத்திருக்கிறது! நோர்மன் ஃபொஸ்டர் திருடிவிட்டாரா என்பதைப் படங்களைப் பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்.



(படங்கள்: இணையத்திலிருந்து)

4 :

  1. நோர்மன் ஃபொஸ்டர்
    இவர் வளைவு இப்போதுள்ள குஷ்பு,ஆனால் இப்போது கட்டியுள்ள ஸ்டேடியத்தின் வளைவு "த்ரிஷா".அபாயகரமாக சாய்துள்ளது.
    கார்பன் காப்பி என்று சொல்லமுடியாவிட்டாலும்,கொஞ்சம் திருடியிருப்பதாகத்தான் தோன்றுகிறது.
    என்னங்க ரொம்ப நாளாக இந்த பக்கம் காணமுடியவில்லை?

  2. வைசா!
    பிரமாண்டமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் வெம்பிளி என்றால் அந்த இரட்டைச் சிகரம் மனதில் வருகிறது.
    அடுத்து பிரதி என்பது இன்றைய கட்டிடங்கள் யாவிலும் இப்படி ஒத்த தன்மை இருப்பது தவிர்க்கமுடியாதது.

  3. குமார்,

    பணி காரணமாக எல்லாப் பதிவுகளையும் படிக்க முடியாமல் போனது. இனித் தான விட்டுப் போன உங்கள் பதிவுகளைப் படிக்க வேண்டும். அதிருக்கட்டும். உங்கள் பதிவை bookmark செய்து விட்டேன். தொடர்ந்து எழுதுங்கள். நான் வந்து படிக்கிறேன்.

    நன்றி குமார்.

    வைசா

  4. யோகன்,

    இரட்டை சிகரத்தை மறப்பதற்கு சில காலம் எடுக்கும். அதை விடுங்கள். ஒத்த தன்மை இருக்கலாம். ஆனால், அந்த வளைவை வடிவமைத்திருப்பது (அது வேறு எங்கும் கட்டப்படாமல் இருக்கும்போது) அந்தப் பழைய வடிவமைப்பிலிருந்து திருடப் பட்டதாக தான் இருக்கவேண்டும்.

    நன்றி யோகன்.

    வைசா