பறவைக் காய்ச்சலுக்குத் தயாராகிறது பிரிட்டன்

அண்மையில் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவியது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக 1 லட்சத்து 59 ஆயிரம் வான்கோழிகளை வெட்டி எரித்து விட்டார்கள். இனி வசந்த காலம் வரவிருப்பதால், தென்கிழக்காசியாவிலிருந்து இடம் பெயர்ந்து வரும் பறவைகள் பிரிட்டனுக்குப் பறவைக் காய்ச்சல் வைரஸை (H5N1) கொண்டுவரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

அதற்கு என்ன இப்போது என்கிறீர்களா? காரணம் உண்டு. பிரிட்டிஷ் அரசு பறவைக் காய்ச்சல் தொற்று நோய்ப் பரவல் சமயம் நடைமுறைப் படுத்த வேண்டிய திட்டங்களை அமுல்படுத்துவது என தீர்மானித்துள்ளது. முக்கியமாக லண்டனில் இத்தகைய ஒரு திட்டம் இன்றியமையாததாகிறது. இதில் நான்கில் ஒரு லண்டன் வாசி நோய் வாய்ப்படுவாரென்றும், 50,000 பேர் வரை இறப்பார்கள் எனவும் கணக்கிடுகிறார்கள். பாரிய லண்டன் அதிகாரசபை ஏறத்தாழ 10 லட்சம் பவுண்டுகள் செலவில் 1,00,000 டாமிஃபுளூ மருந்தை வாங்கி வைத்துள்ளது. இம்மருந்து H5N1 வைரஸ் வருவதைத் தடுத்து நிறுத்தாது. ஆனால், இந்தப் பறவைக் காய்ச்சலின் முக்கிய கொல்லியான சுவாசப்பையினுள் திரவம் தோன்றுதலைத் தடுத்து நிறுத்தும். இதன் மூலம், உடம்பே பிறபொருள் எதிரியை உற்பத்தி செய்து வைரஸை கொல்வதற்குப் போதிய அவகாசம் கிடைக்கிறது. ஆனால், வைரஸைத் தடுத்து நிறுத்தவல்ல தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு, அந்த வைரஸ் எது என்பது தெரிய வந்த பின்னர் ஆறு மாதகால அவகாசம் தேவைப்படும்.

தொற்று நோய் பரவ ஆரம்பிக்கும்போது யாருக்கெல்லாம் இந்த டாமிஃபுளூ மருந்து முதலில் கொடுக்கப்படும்? போலீஸார், தீயணைப்புப் படையினர், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அம்புலன்ஸ் ஊழியர்கள். அப்படிக் கொடுத்தால் அது எத்தனை காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்? ஐந்து மாதங்கள். சாதாரண பொது மக்களுக்கு முதலிலேயே இம்மருந்து கொடுக்கப்பட மாட்டாது. நோய் வந்த பின்னரே அது கொடுக்கப்படும். அதில் கொஞ்சம் அபாயம் உள்ளது. ஏனென்றால், நோய் வந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இம்மருந்து கொடுக்கப்படாவிட்டால் அதில் எந்த பயனும் இல்லை. ஆயினும், செலவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.


வேறு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்? பாடசாலைகள் மூடப்படும். நிறுவனங்களை வேலை ஆரம்பிக்கும் மற்றும் முடிக்கும் நேரத்தை மாற்றி அமைப்பதற்குக் கேட்பார்கள். இதன் மூலம் போக்குவரத்தில் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இப்போதே கணினி மென்பொருள்களைக் கொண்டு இந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு உதவும் என்று ஆராய்ந்து வருகிறார்கள்.

என்ன நடக்கும் என்பதைக் காலம் தான் சொல்லும்.

(படங்கள்: இணையத்திலிருந்து)

0 :