உண்மையான உலக வெப்பமாக்கல்?

மனிதர்களைப் பொறுத்தவரையில் சூரியன் அழிவில்லாமல் என்றும் இருக்கும் எமது சொந்தத் தாரகை. ஆனால், இந்த நட்சத்திரமும் ஏனைய நட்சத்திரங்களுக்குக் கிடைக்கும் அதே முடிவைத் தான் எதிர் நோக்குகிறது. அதாவது இறுதியில் பொலிவிழந்து இறந்து போகத் தான் போகிறது. ஏற்கனவே கூறியது போல, நம்மைப் பொறுத்தவரையில் சூரியன் அழிவில்லாதது. சூரியனுக்கு முடிவு நெருங்க இன்னும் 350 கோடி வருடங்கள் இருக்கின்றன. அப்பாடா!

பூமியைப் பொறுத்தவரையில் சூரியனின் சக்தி மிக முக்கியமானதாகும். உலகின் இன்றியமையாததான இரசாயனத் தாக்கமாகிய ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது சூரிய சக்தி. பக்டீரியா, பாசிகள், தாவரங்கள் போன்றவை சூரிய ஒளியைக் கொண்டு காபன் டை ஆக்ஸைடையும் நீரையும் ஆக்ஸிஜனாகவும் உணவாகவும் மாற்றிக் கொள்கின்றன. இந்தத் தாக்கத்தை நம்பித்தான் உலக உணவுச் சங்கிலியும் காலநிலையும் இயங்குகின்றன. ஆனால் சூரியனுக்குச் சக்தியை வழங்கும் ஹைட்ரஜன் முடியும்போதுதான் உலகமும் தனது முடிவை எதிர் நோக்கும்.

சூரியன் பிறந்தது எப்போது? ஏறத்தாழ 450 கோடி வருடங்களுக்கு முன் பாரிய உடைந்து கொண்டிருக்கும் நட்சத்திரம் ஒன்றிலிருந்து நமது சூரியன் பிறந்தது. அவ்வாறான பெரிய நட்சத்திரத்திலிருந்து உதிர்ந்த பாரிய முகில்கள் மேலும் உடைந்து சிறிய துண்டங்களாகி இவை ஒன்றுசேர்ந்து சிறிய நட்சத்திரங்கள் உருவாகின்றன. அவற்றில் சில, எமது சூரியனைப் போல, தமது மிக நெருக்கமான நடுப்பாகத்தில் ஹைட்ரஜன் இணைப்பு அணுத் தாக்கத்தைக் கொண்டிருக்கும். இம்மாதிரியான நட்சத்திரங்களில் சில தான் கோடிக் கணக்கான வருடங்களுக்கு ஒளியையும் வெப்பத்தையும் வழங்க வல்லனவாகின்றன.

தற்போதுள்ள நிலையில் சூரியன் பூமியிலிருந்து 14 கோடி 95 லட்சத்து 97 ஆயிரத்து 900 கிலோமீற்றர் தொலைவில் இருக்கிறது. சூரியன் தன்னைத் தானே சுற்றிவர ஏறத்தாழ 25 (பூமி) நாட்கள் எடுக்கிறது. அதனது விட்டம் ஏறத்தாழ 13 லட்சத்து 91 ஆயிரம் கிலோமீற்றர்கள். பூமியின் விட்டத்தைப் போல் 109 மடங்கு இது. பூமியின் எடையை விட 3 லட்சத்து 32 ஆயிரத்து 900 மடங்கு பெரியது. சூரினுக்கூள் 74% ஹைட்ரஜனும் 25% ஹீலியமும் இருக்கின்றன. ஆகையால் இப்போதைக்கு சூரியனைக் கொண்டிழுப்பதற்குப் போதுமானளவு எரிபொருள் இருக்கிறது. சூரியனின் நடுப்பகுதியில் 1 கோடியே 50 லட்சம் செல்சியஸ் வெப்பநிலை காணப்படுகிறது. அதன் மேற்பரப்பில் வெப்பநிலை ஏறத்தாழ 6000C. கரும்புள்ளிகள் இருக்கும் பகுதியில் மட்டும் வெப்பநிலை குறைந்து 4000C ஆகவிருக்கும். ஆனால் இன்னும் 350 கோடி வருடங்களில் சூரியனின் முடிவுக்காலம் ஆரம்பமாகும். அப்போது என்ன நடக்கும்? சூரியனுக்கு ஒளியையும் வெப்பத்தையும் அள்ளி வழங்கும் ஹைட்ரஜன் இணைப்புத் தாக்கம் குறையத் தொடங்கிவிடும். ஏனென்றால் சூரியனிலிருந்த ஹைட்ரஜனின் பெரும்பகுதி ஹீலியமாக மாறியிருக்கும். இத்தருணத்தில் சூரியனில் வெப்பநிலை 10%ஆல் அதிகரித்திருக்கும். பூமியில் அச்சமயத்தில் வெப்பநிலை 2000C ஆகவிருக்கும்! மனிதன் அப்போதும் இருப்பானானால் வேறு ஏதாவது கோளில் குடி புகுந்திருப்பான்.

இப்போதிருந்து 550 கோடி வருடங்களில், சூரியனின் நடுப்பகுதியில் ஹைட்ரஜன் ஏதும் மீதமிருக்காது. அப்படியாயின், அது அப்போது ஹீலியத்தை எரிக்க ஆரம்பிக்கும். இச்சமயத்தில் அது 10,000 மடங்கு பிரகாசமாகத் தோற்றமளிக்கும். அத்துடன், அதனது விட்டம் 80 மடங்கு அதிகரிக்கும். அதனது மேற்பரப்பின் வெப்பநிலை குறைந்து 3500C ஆகி சிவப்பாகத் தோற்றமளிக்கும். இப்போது நமது சூரியன் செவ்வரக்கன் ஆகிவிட்டான். சூரியனுக்குக் கிட்டவுள்ள கோளான புதன் சூரியனுக்குள் ஐக்கியமாகி விட்டிருக்கும். ஆனால், பூமியும் வெள்ளியும் (சூரியனுக்குக் கிட்டவுள்ள அடுத்த இரு கோள்களும்) தப்பித்து விடும். ஏனெனில், சூரியனுடைய குறைந்த எடை காரணமாக அதனது ஈர்ப்பு சக்தி குறைந்து போயிருக்கும். எனவே, இந்த இரு கோள்களும் தமது தற்போதைய பாதையில் இருந்து விலகி சூரியனிலிருந்து சற்று விலகிய பாதையில் சுற்றத் தொடங்கியிருக்கும். பூமியின் வளி மண்டலத்தை சூரியப் புயல்கள் அடித்து தள்ளிக் கொண்டு போயிருக்கும். சமுத்திரங்களெல்லாம் கொதித்து முழுமையாக வற்றிப் போயிருக்கும். உயிர் வாழ்வதென்பது இயலாததொன்றாகியிருக்கும். இது தான் மிகப் பெரிய உலக வெப்பமாக்கலாக இருக்கும்!

இப்போதிருந்து 650 கோடி வருடங்களில், சூரிய உடைவின் முதல் கட்டம் ஆரம்பமாகும். சூரியனின் மேற்பரப்பில் மணிக்கு 60 லட்சம் கிலோமீற்றர்கள் வேகத்தில் சூறாவளிகள் தோன்றும். இந்தப் பாரிய வேகத்தில், அதனது வாயுக்களில் பெருமளவு அதனை விட்டு வெளியேறி விடும். இவை தன்னிச்சியாக சூரியனைச் சுற்றி பாரிய முகில்களை உருவாக்கும்.

இப்போதிருந்து 750 கோடி வருடங்களில், சூரியனின் நடுப்பாகத்திலுள்ள எரிபொருள் பற்றாக் குறையினால், அது ஒரு வெள்ளைக் குள்ளன் ஆகிவிடும். நடுப்பாகத்தைச் சுற்றியிருந்த வாயுக்களெல்லாம் தப்பித்து ஓடிவிட, இந்த நடுப்பாகம் மட்டும் நன்றாகச் சுருங்கிப்போய், இருக்கும் கொஞ்ச எரிபொருள்களையும் எரித்து மின்னிக் கொண்டிருக்கும். அதனுடைய பருமன் தற்போதையதைப் போல் 10 லட்சத்தில் ஒரு பகுதியாகத் தான் இருக்கும். இத் தருணத்தில் நமது சூரியன் இறந்து விட்டதாகக் கருதலாம். இதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எரிபொருள் முழுவதுமாக தீர்ந்து போக, சூரியன் எந்த ஒளியையும் சிந்தாமல் ஒரு கருப்புக் குள்ளன் ஆக மாறுவான்.

அப்படி சூரியன் இறக்கும்போது இந்தப் பிரபஞ்சத்தின் வயது வெறும் 2000 கோடி வருடங்கள் ஆகத்தான் இருக்கும்!
(படங்கள்: இணையத்திலிருந்து)

7 :

  1. பல நல்ல தகவல்கள். சூரியன் அழிவதற்குள் மனிதர்கள் வேறு கோள்களில் குடிபுகுவது சாத்தியமா என்றுதான் புரியவில்லை. நேரமிருந்தால் விளக்குங்கள்.

    அன்புடன்
    தம்பி

  2. நன்றி தம்பி.

    வேறு கோள்களுக்குக் குடிபுகுதல் என்பது தனி விடயம். இன்னொரு பதிவில் பார்க்கலாம். அதை விடுங்கள். மனித குலம் இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்காவது தாக்குப் ப்டிக்கும் என்றா நினைக்கிறீர்கள்?

    வைசா

  3. வைசா!
    சிக்கலான விடயத்தை நல்ல இலகு நடையில் எழுதியுள்ளீர்கள். இப்படி ஒரு விவரணச் சித்திரம் பார்த்தேன்.
    மனிதன் இதுக்குமுதல் அடிசுக் கொண்டு செத்துடுவான் போல் உள்ளது;

  4. வைசா,

    நல்ல தகவல்கள்.

    சூரியன் ஃப்யூஸாகி கருந்துளைகளாவதை பற்றி நான் எழுதிய பதிவு...

    http://jeeno.blogspot.com/2005/02/blog-post_21.html

  5. உண்மைதான் யோகன். மனிதர்கள் எத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிப்பார்களோ?

    சீனு,

    நீங்கள் எழுதிய அந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன். அருமையாக எழுதியுள்ளீர்கள். அதற்கு எனது பின்னூட்டத்தையும் பாருங்கள். நன்றி சீனு.

    வைசா

  6. வைசா

    நல்ல பதிவு!!

  7. நன்றி சிவபாலன்.

    வைசா