மன்னிக்க வேண்டுகிறேன்....

அண்மையில் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தி என் கவனத்தை ஈர்த்தது. அதன் சாராம்சத்தை இந்தப் பதிவிலே பார்ப்போம். அனாமதேயமாக மன்னிப்புக் கேட்கும் வசதிக்காக ஓர் இலவசத் தொலைபேசி எண். அந்த முனையில் யாரும் பதிலளிக்க மாட்டார்கள். ஒலிப்பதிவு சாதனத்தில் உங்கள் மன்னிப்புச் செய்தியைப் பதிவு செய்து விடலாம். பெயர் விபரங்களைக் கொடுக்கத் தேவையில்லை. கொடுக்க வேண்டாம் என்றுதான் இந்தத் தொலைபேசி இணைப்பை நடத்துபவர்கள் கூறுகிறார்கள். மன்னிப்புச் செய்தி எதற்காகவேனும் இருக்கலாம். என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது.

பிரிட்டனில் இப்போது இருக்கும் இந்தச் சேவை அமெரிக்காவிலுள்ள சேவையைப் பின்பற்றுகிறது. அங்கு இந்தச் சேவை 1980ல் நியூ யோர்க்கில் ஆலன் பிரிட்ஜ் என்ற ஓவியரால் ஆரம்பிக்கப் பட்டது. அமெரிக்கர்களை விட பிரித்தானியர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் தயக்கம் காட்டுபவர்கள். "ஆகவே, அமெரிக்காவை விட இங்குதான் இப்படியான ஒரு சேவைக்கு முக்கிய தேவை இருக்கிறது" என்கிறார், இந்தத் தொலைபேசிச் சேவையைப் பிரிட்டனில் ஆரம்பித்து வைத்துள்ள ஓவியர் ஜேம்ஸ் லீஸ்.
மன்னிப்புக் கேட்பதென்பது மிக முக்கியமானதொன்று. குற்ற உணர்ச்சி மிக மிகக் கொடூரமானது. ஒருவரது வாழ்வை முழுமையாக ஆக்கிரமிக்கக் கூடிய தன்மை வாய்ந்தது. மன்னிப்புக் கேட்பது அதற்கு ஒரு வடிகாலாக அமையும். தற்கொலைக்கு முயல்பவர்களில் 80% பேர் ஏதோ ஒரு வகையில் குற்ற உணர்ச்சிகளை மனதுக்குள் அடக்கி வைத்திருப்பவர்கள் தான்.


மன்னிப்புக் கேட்பதென்பது இந்த அளவுக்கு நல்லது என்றால், நாம் ஏன் அதை அதிகம் செய்வதில்லை? இதற்கு முக்கியமான காரணம், அப்படி செய்வது தனது பலவீனத்தின் அறிகுறி என்று மற்றவர்கள் நினைத்து விடுவார்கள் என்பது தான். மன்னிப்புக் கேட்பது தோல்வியல்ல, மனிதனுடைய சாதாரண வாழ்வோடு இணைந்தது தான் என்பதைப் புரிந்து கொண்டால் மீதம் இலகுவாகி விடும்.


உண்மையில் மன்னிப்பு என்பது பாதிக்கப் பட்டவரிடம் கேட்கப் பட வேண்டியது. அப்படியாயின், இந்தத் தொலைபேசிச் சேவை எதற்கு? இதில் பதிவு செய்து வைப்பதால் பாதிக்கப் பட்டவர் இது குறித்து அறிந்து கொள்ள வழியில்லையே? உண்மைதான். ஆனால் பலரால் வார்த்தைகளைக் கோர்த்து சம்பந்தப் பட்டவரிடம் மன்னிப்புக் கேட்க முடிவதில்லை. இந்தத் தொலைபேசிச் சேவை அதற்கு ஒரு முதற் படியாக அமைகிறது. இதன் பின்னர் அவர்கள் சம்பந்தப் பட்டவரிடம் மன்னிப்புக் கேட்டால் நல்லது. இல்லையெனிலும் பரவாயில்லை; அவர்களது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இந்தச் சேவை அமைந்திருக்கும். அதுவும் நன்மைக்கே.


ஒரு வகையில் பார்த்தால், சர்ச்சில் பாவ மன்னிப்புக் கேட்பதற்கும் இதற்கும் பெரியளவு வித்தியாசம் இல்லை.


இதோ மன்னிப்புக் கேட்டு விடப்பட்ட சில பதிவுகள்:


"1997ல் ஸ்டேசன் வீதியில் இருக்கும் தம்பதிடம் மன்னிப்புக் கோருகிறேன். அவர்கள் வீட்டில் தங்கி விட்டுப் பின்னர் வெளியேறும் போது அவர்களது வீட்டு முன்கதவைத் தாளிடாமல் வந்து விட்டேன். அவர்கள் வீட்டுக்குள் கள்வர் புகுந்து விடவில்லை என நம்புகிறேன்."




"எனது காதலனின் கண்ணில் குத்து விட்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்."




"அரசியலாளர்கள் பொய் கூறுவதற்காக எதிர்காலத் தலைமுறையிடம் மன்னிப்புக் கேட்கிறேன். இவர்களால் உணமையைச் சொல்லவே முடியாது. உண்மையைச் சொல்லும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை. ஆகவே, இந்த மன்னிப்புப் பதிவைக் கவனமாக வைத்திருந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கும் மக்களுக்குக் கிடைக்கச் செய்யுங்கள். நன்றி."



எல்லாம் சரி. அந்த எண் என்ன? பிரிட்டனில் இலவசமாக அழைக்கக்கூடிய அந்த எண்: 0800 970 9394. பிரிட்டனுக்கு வெளியேயிருந்து அழைக்கும் போது (இது இலவசம் இல்லை) + 44 800 970 9394




(படம்: இணையத்திலிருந்து)


6 :

  1. வைசா,

    டெம்பெளேட் ரொம்ப நல்லாயிருக்கிறது..

    செய்தி பகிர்வுக்கு நன்றி

  2. நன்றி சிவபாலன்.

    பொன்ஸ், பாஸ்டன் பாலா ஆகியோர் புதிய ப்ளாக்கரைப்பற்றி எழுதிய பதிவுகளை வைத்து செய்தது இது.

    வைசா

  3. தமிழ்மணத்திலே இருக்கீங்க, ஆனால் உங்களைத் தெரியவே இல்லையே, மன்னிச்சுக்குங்க! :D

  4. உங்களுக்கு இந்தத் தொலைபேசிச் சேவை தேவைபடவில்லை போலிருக்கிறது :-)

    முதன்முதலாக இந்தப் பக்கத்துக்கு வந்திருக்கிறீர்கள். வாங்க, வாங்க.

    நான் அடிக்கடி பதிவுகள் எழுவதில்லையாதலால் உங்கள் கவனத்தை ஈர்க்காமல் இருந்திருக்கும்.

    நன்றி கீதா மேடம்.


    வைசா

  5. சில வருடங்களுக்கு முன் இதேபோல் ஆனந்தவிகடனில் சிலர் தாங்கள் செய்த தவறுகளை எழுதி மன்னிப்பு வேண்டியிருந்தார்கள்.

  6. வருகைக்கும் தகவலுக்கும் நன்றி, பாலராஜன்கீதா.

    வைசா