எல் நீனோ என்பது ஸ்பானிஷ் மொழியில் ஓர் ஆண் குழந்தை என்று பெயர். இதைப் பசிபிக் சமுத்திரத்தில் நிகழும் ஒரு மாற்றத்திற்குப் பெயராகப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக கிறிஸ்மஸ் சமயத்தில் தான் இது நிகழ்வதால் இயேசுவைக் குறிப்பதாக இந்தப் பெயர் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் எல் நீனோ என்பது ஆண்டு தோறும் கிறிஸ்மஸ் சமயத்தில் பசுபிக் கடலில் எக்குடோர், பேரு நாடுகளின் கரையோரமாகத் தோன்றும் ஒரு வெப்ப நீரோட்டத்தையே குறித்தது. இந்த நீரோட்டம் சில வாரங்களே நீடிக்கும். ஆனால், 2-7 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நீரோட்டம் பல மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு நீடிக்கும். தற்காலத்தில் இதைதான் எல் நீனோ எனப் பொதுவாகக் கூறப்படுகிறது. உதாரணமாக 1991ல் உருவான எல் நீனோ 1995 வரை நீடித்தது. காலநிலையில் இதனது தாக்கங்கள் உலகளாவியது.
ஒரு சாதாரண வருடத்தில், தாழ்ந்த காற்றழுத்தப் பகுதி ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவுக்கு மேலாகவும், காற்றழுத்த உயர்வுப் பகுதி பசிபிக் கடலுக்கு மேலும் தோன்றும். இதன் காரணமாக, தென்னமெரிக்-காவிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி காற்று வீசும். கடலின் வெப்பமான மேற்பரப்பு நீரை இக்காற்று தன்னோடு அணைத்துச் சென்று, இந்தோனேசியாவிலும் வட ஆஸ்திரேலியாவிலும் மழை பொழியச் செய்யும். வெப்பமான மேற்பரப்பு நீரை ஈடுசெய்ய குளிர்ந்த நீர் பசிபிக் கடலின் அடியிலிருந்து எக்குடோர், பேரு நாடுகளின் கரை-யோரமாக மேற்பரப்புக்கு வந்து சேரும். பசிபிக் கடலின் இந்த இரு பகுதிகளுக்கும் இடையில் கடல்நீரின் வெப்பநிலையில் ஏறத்தாழ 10 செல்சியஸ் வித்தியாசம் இருக்கும்.
ஆனால், ஓர் எல் நீனோ வருடத்தில், வட ஆஸ்திரேலியாவின் மேலே காற்றழுத்த உயர்வுப்பகுதி தோன்றும். அதே சமயம், பசிபிக்கின் மையப்பகுதியிலும், எக்குடோர், பேரு நாடுகளின் கரையோரத்திலும் காற்றழுத்தம் குறைந்த பகுதிகள் தோன்றும். காற்றழுத்தத்தில் ஏற்படும் இத்தகைய மாற்றம், வழமையாக தெற்கு அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி வீசும் காற்றைக் குறைக்கும் அல்லது மறுபுறமாக வீசவைக்கும். இதனால் எக்குடோர், பேரு நாடுகளின் கரையோரத்தில் பூமத்தியரேகையின் வெப்பமான நீர் "தேங்குகிறது". வழமையான குளிர்ந்த சத்துநிறைந்த நீர் கடலடியிலிருந்து மேற்பரப்புக்கு வர வழியில்லாமல் போகிறது. இந்தப் பசிபிக் கடலின் பகுதியில் மீன்களின் எண்ணிக்கை இதன் காரணமாக வெகுவாகக் குறையும்.பசிபிக்கின் இந்தப் பக்கத்தில், அதாவது அமெரிக்கப் பக்கத்தில், மழைவீழ்ச்சியும் அதன் காரணமாக வெள்ளப்பெருக்கும் அதிகமாகும். முரணாக, ஆஸ்திரேலியாவின் பக்கத்தில் மழைவீழ்ச்சி குறைந்துவிடும். வரட்சியும் அதன் காரணமாக காட்டுத்தீயும் அதிகரிக்கும்.
இதுவரை காலமும் எல் நீனோ நடந்த ஆண்டுகள்:
1902-1903 1905-1906 1911-1912 1914-1915
1918-1919 1923-1924 1925-1926 1930-1931
1932-1933 1939-1940 1941-1942 1951-1952
1953-1954 1957-1958 1965-1966 1969-1970
1972-1973 1976-1977 1982-1983 1986-1987
1991-1992 1994-1995 1997-1998
பொதுவாக, எல் நீனோ நடந்து முடிந்த பின்னர், காலநிலை சாதாரண நிலைக்குத் திரும்பிவிடும். ஆயினும், சில ஆண்டுகளில் தென் அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி வீசும் காற்று மிகப் பலமாக இருக்கலாம். இதனால், பசிபிக்கின் மத்திய மற்றும் கிழக்குப்பகுதிகளில் வழமையைவிட அதிகமான குளிர் நீர் இருக்கும். இந்நிகழ்வை லா நீனோ என்பர்.
எல் நீனோ உலகளவிய அளவில் காற்றோட்டங்களில் தாக்கம் விளைவிக்கக் கூடியது. பேரு, எக்குடோர் ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவில் வரட்சி போன்றவற்றைத் தவிர, உலகின் பல பாகங்களிலும் அசாதாரண காலநிலையைத் தோற்றுவிக்கும். உதாரணமாக, 1982-83ல் தெற்கு ஆபிரிக்கா, தெற்கு இந்தியா, இலங்கை, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வரட்சி; பொலிவியா, கியூபா ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு; ஹவாயில் புயல். 1997-1998ல் ஐரோப்பாவின் பலபகுதிகளில் குளிர்கால வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டது.
(படங்கள் இணையத்திலிருந்து)
3 :
வைசா,
நல்ல பதிவு!
ஏற்கனவே இங்கே வெப்ப நிலை குளிர்கால வெப்ப நிலையைவிட 15 முதல் 20F அதிகமாக இருப்பதாக காலநிலையாளர்கள் புலம்புகிறார்கள்..
இதுவும் ஒரு காரணமாக இருக்குமா?
வைசா!
மிக நல்ல காலத்துக்கேற்ற விடயம். ஒன்று நிச்சயம் இனிமேல் கடும் குளிருக்குச் சாத்தியம் குறைந்தே வருகிறது. இவ்வருடம் பாரிசில் பனிமழை இல்லை. துருவங்கள் கரைவதை நாளும் கூறுகிறார்கள். இயற்கைச் சீற்றம் கட்டைக் கடந்து எங்கும் தாண்டவமாடுகிறது. சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் புலம்புகிறார்கள்.
காலம் கடந்த ஞானம்.
நனைத்துச் சுமக்கிறோம்.
யோகன் பாரிஸ்
//பொதுவாக, எல் நீனோ நடந்து முடிந்த பின்னர், காலநிலை சாதாரண நிலைக்குத் திரும்பிவிடும். ஆயினும், சில ஆண்டுகளில் தென் அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி வீசும் காற்று மிகப் பலமாக இருக்கலாம். இதனால், பசிபிக்கின் மத்திய மற்றும் கிழக்குப்பகுதிகளில் வழமையைவிட அதிகமான குளிர் நீர் இருக்கும். இந்நிகழ்வை லா நீனோ என்பர்.//
எல் நினோவுக்குப் பிறகு வருவது லா நீனா அல்லவா? (La Nina) எல் நீனோ ஒரு ஆண் குழந்தை என்பதுபோல், லா நீனா ஒரு பெண் குழந்தை.
அமெரிக்காவில் வடகிழக்குப் பகுதிகளில் இன்னும் குளிர்காலம் முழுமூச்சில் வந்தபாடில்லை. இந்த ஆண்டு ஸ்னோ, சுமார் ஒன்றரை மாதம் தாமதம், பல இடங்களில் இன்னும் வந்தபாடில்லை. இதுவும் எல் நீனோவினால் இருக்கலாம்.