நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் டாக்சியில் பயணம் செய்தேன். வழமையாக, அந்நேரத்துக் காலநிலை அல்லது லண்டன் வாகன நெருக்கடி, அதற்கான தனது தீர்வு அல்லது லண்டனின் போக்குவரத்துப் பிரச்சனை, அதற்கான தனது தீர்வு என்று ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றி ஓட்டுனர் என்னோடு பேசிக்கொண்டு வருவார். இம்முறை நான் எங்கு, என்ன படிக்கிறேன் என்று ஆரம்பித்து, அந்தக் கல்லூரியில் இருக்கும் வேறு என்னென்ன பாடங்கள் கற்றுத் தருகிறார்கள் என்று விரிந்து, இறுதியில் பி.எச்.டி பற்றிய பேச்சில் வந்து நின்றது. அப்போது அந்த ஒட்டுனர் எங்கள் கல்லூரியில் பி.எச்.டி செய்து முடிக்க எத்தனை ஆண்டுகள் தேவை என்று கேட்டார். ஏதோ தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாகக் கேட்கிறார் என்று நானும் அதைப் பற்றி ஒரு விளக்கத்தைக் கொடுத்தேன்.
பொதுவாக மூன்று அல்லது நான்கு வருடங்கள் எடுக்கும். அதுவும் மிகக் கடுமையாக உழைத்துப் பெற வேண்டும் என்றெல்லாம் அளந்து கொண்டிருந்தேன். அவர் கேட்டார், "லண்டனில் டாக்சி ஓட்டுனராக வர எத்தனை ஆண்டுகள் தேவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" திடீரென்று இப்படிக் கேட்டால்? சிறிது நேரம் யோசித்து விட்டு இரண்டு வருடங்கள் என்றேன். அவர் சிரித்தார். "குறைந்தது ஐந்து ஆண்டு-களாவது காரை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் லண்டனின் எல்லாப் பகுதிகளுக்கும் ஓடிப் பழகி வரவேண்டும். லண்டனிலுள்ள அத்தனை முகவரிகளும் அத்துப்படி ஆகவேண்டும். அதன் பின்னர், டாக்சி பயிற்சி எடுத்து அநுமதிப் பத்திரம் பெற இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும்" என்றார்.
உண்மைதான், லண்டனில் நீங்கள் போக வேண்டிய இடம் தெரியவில்லை என்றால் லண்டன் டாக்சி ஓட்டுனர்களிடம் கேட்டால் போதும். உடனே கூறிவிடுவார்கள். லண்டன் வீதிகளின் நெளிவு சுழிவுகள் எல்லாம் அறிந்தவர்கள் இவர்கள். பிறிதொரு சமயம், பேமிங்-ஹாம் போவதற்கு ரயில் எடுக்க வேண்டும் யூஸ்டன் ரயில் நிலையத்திலிருந்து. என்னுடைய மேலாளருக்கும் சேர்த்து முதல் நாளே பயணச்சீட்டுகளை வாங்கி வைத்து விட்டேன். அவரை யூஸ்டன் ரயில் நிலையத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து இந்த ரயில் நிலையத்திற்கு பாதாள ரயிலில் போவதென்றால் 45 நிமிடங்கள் தேவை. முதலில் ஒரு ரயிலை எடுத்துப் பின்னர் இன்-னொரு ரயில் எடுத்துப் போய்ச் சேர வேண்டும். காலையில் எழுவதற்குத் தாமதமாகி விட்டது. ரயில் புறப்படுவதற்கு முப்பத்தைந்தே நிமிடங்கள் தான் இருக்கின்றன. இப்போது என்ன செய்வது? டாக்சி எடுப்பதுதான் ஒரே வழி. டாக்சி என்றாலும், அந்த நேரத்துப் போக்குவரத்து நெரிசலில் குறைந்தது 45 நிமிடங்கள் தேவை. வீதிக்கு வந்து ஒரு டாக்சியைப் பிடித்து நிலைமையை விளக்கினேன். முதலில் இது சாத்தியமில்லை என்ற ஓட்டுனர் பிறகு ஒருவாறு ஒப்புக் கொண்டு என்னை ஏற்றிக் கொண்டார். ஏதேதோ குறுக்கு வழிகளால் வண்டியைச் செலுத்தி முப்பதே நிமிடங்களில் அங்கே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தார். இதுதான் இவர்களது சாமர்த்தியம்.
இது ஏன் இப்போது நினைவுக்கு வருகிறது என்றால், சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், பிரிட்டனிலேயே மிகக் கடினமான வேலை லண்டனில் டாக்சி ஓட்டுவது தான் என்று கண்டிருக்கிறார்கள். வட கடலில் எண்-ணெய் துளைத்து எடுப்பதை விடவும் இது கடினமானதாம்! ஆனால் ஒன்று, இங்கு நிறைய மினி-வாடகைக் கார் நிறுவனங்கள் இருக்-கின்றன. இவற்றை அல்ல இந்த ஆய்வு குறிப்பிடுவது. லண்டனுக்கு வந்தால், இந்த மினி-வாடகைக் கார்களை அணுகாதீர்கள். இந்த ஓட்டுனர்களால் எத்தனையோ குற்றச் செயல்கள் நடக்கின்றன. ஒழுங்காகக் கட்டுப்படுத்தப் படுவதில்லையாதலால், அவர்களுக்கு எல்லா இடமும் தெரியாது, இம்மாதிரியான குற்றச் செயல்கள் நடக்கவும் சாத்தியமாகிறது. எனவே லண்டன் டாக்சிகளை வாடகைக்கு அமர்த்தினீர்களானால் ஒரு பிரச்சனையும் வராது. என்ன கொஞ்சம் காசு கூடுதலாக இருக்கும்!
லண்டன் டாக்சிகள் என்கிறபோது, சமீபத்தில் வெளிவந்த இன்னொரு ஆய்வும் நினைவுக்கு வருகிறது. டாக்சியில் மறதியாகப் பயணிகள் விட்டுச் செல்லும் பொருள்கள்! லண்டனில் கடந்த ஆறு மாத காலத்தில் மாத்திரம் 50000க்கும் மேற்பட்ட கைத்தொலைபேசிகள் மறதியாக டாக்சிகளினுள்ளே விட்டுச் செல்லப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் இரண்டாவது இடத்தில் இருப்பது: மும்பாய். முழு விவரமும் இதோ:
லண்டன் 54872 கைத்தொலைபேசிகள்
மும்பாய் 32970
சிட்னி 6440
வொஷிங்டன் டிசி 6102
பேர்லின் 6100
ஒஸ்லோ 3640
சான் ஃபிரான்ஸிஸ்கோ 2754
மியூனிக் 1485
லண்டன் டாக்சிகளில் மறதியாக விடப்படும் பொருள்களில் முதலிடம் கைத்தொலைபேசிகளுக்கு இருந்தாலும், 4718 கைக்கணினிகள், 3179 மடிக்கணினிகள் ஆகியனவும் விட்டுச் செல்லப் பட்டிருக்கின்றன. இவற்றை விட, முந்தைய வருடங்களில் ஒரு லட்சம் பவுண்டுகள் பெறுமதியான வைரக்கற்கள், பழமை வாய்ந்த தொலை நோக்குக்காட்டி, ஒரு மரக்கால் போன்றவையும் விட்டுச் செல்லப்பட்டிருக்கின்றன. ஒரு தானியங்கித் துப்பாக்கியைக் கூட யாரோ விட்டுச் சென்றிருக்-கிறார்களாம். இதை விட குடிபோதையில் இருந்த யாரோ ஒரு 'குடிமகன்' தனது கேர்ள்பிரண்டையே 'டிப்ஸாக' விட்டுச் செல்ல முயன்றானாம். கணக்கில் அடங்காத குடைகள், பிரீஃப்கேஸ்கள்!
என்ன தான் சொல்லுங்கள், லண்டன் லண்டன் தான். 96 சத வீதமான கைத்தொலைபேசிகளும் 97 சத வீதமான மடிக்கணினிகளும் லண்டன் டாக்சி ஓட்டுனர்களால் திரும்ப ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன. உலகத்திலேயே மிக அதிக வீதம் இது! திரும்பக் கொடுப்பதிலும் சிக்கல் உண்டு! பயணிகள் ஆசனத்தில் ஒரு பிரீஃப்கேஸை விட்டு விட்டு அவசரமாக ஒருவர் இறங்கிச் சென்றிருக்கிறார். நம்ம உத்தமமான லண்டன் டாக்சி ஓட்டுனரும் அதை எடுத்துக் கொண்டு பின்னாலேயே ஓடிப் போய்க் கொடுத்தாராம். அது தன்னுடையதே அல்ல என்று ஓட்டுனரோடு சண்டை போட்டு விட்டு ஓடி விட்டார் அந்த நபர். அந்தப் பெட்டியில் என்னதான் இருக்கிறதென்று பின்னர் ஆராய்ந்து பார்த்தால், அது முழுவதும் ஆபாசக் குப்பைகளாம்!
3 :
வைசா
நல்ல பதிவு!
மேப் கொஸ்ட் மேப் உபயோகமாக இருக்காதா?
ஏனென்றால் நான் தினமும் சிகாகோ டவுன் டவுனினில் தான் காரில் பயனிக்கிறேன். ஆறு மாதங்களில் ஓரளவு இடங்கள் பழகிவிட்டன. லன்டனில் எப்படி என்று தெரியவில்லை..
இருப்பினும் இங்கே இடம் கண்டுபிடிப்பது அவ்வள்வு சிரமமாக இல்லை..
ஆனால் எனது அமெரிக்க மேலாளர் பேசும் போது லண்டன் பற்றி சொல்வதுபோலே கேள்விப் பட்டிருக்கிறேன்..
நீங்கள்
மும்பையில் எவ்வள்வு சதவீதம் திருப்பி தருகிறார்கள்?
வைசா!!
நல்ல விபரங்கள்!!!
எனினும் தற்போது; மினி டாக்சிகளும் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிந்தேன்.
நான் போகும் போது; அதையே அமர்த்துவது(கட்டணக் குறைவு); பிரச்சனை இருந்ததில்லை.
இது வரை!
யோகன் பாரிஸ்