காய்ச்சலுக்கு எதிரான உடனடிப் பாதுகாப்பு மற்றும் உடனடி நிவாரணம் பெறுவதற்கான வழிவகை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டதாகக் கூறுகிறார்கள். மிருகங்களில் பலதரப்பட்ட காய்ச்சல் வைரஸுக்கு எதிராக இதைப் பயன்படுத்திப் பார்த்த போது நூற்றுக்கு நூறு சத வீதம் வெற்றி கிடைத்தது என்கிறார்கள் இந்த வழியை உருவாக்கிய விஞ்ஞானிகள். சரி இதெப்படி சாத்தியமாகிறது?
சாதாரணமாக ஒரு வைரஸுக்கு எதிராகப் பாதுகாப்பு வேண்டுமாயின், அந்த வைரஸைப் பிடித்து கோழி முட்டைக்குள் பாய்ச்சுவார்கள். அந்த முட்டையில் வளரும் வைரஸை எடுத்து இன்னொரு முட்டைக்குள் பாய்ச்சுவார்கள். இப்படியே ஒவ்வொரு முட்டையிலும் வளரும் வைரஸை அடுத்த முட்டையில் பாய்ச்சுவார்கள். இவ்வாறு பல நூறு முட்டைகளுக்குள் போய் வந்த பிறகு அந்த வைரஸ் கோழியை மட்டும் தாக்குவதாகவும் மனிதர்களைத் தாக்க இயலாததும் ஆகிவிடும். ஆனால் அதன் புறத் தோற்றத்தில் மாற்றம் ஏதும் இருக்காது. இந்தத் தாக்க முடியாத வைரஸை மனிதருக்குள் பாய்ச்சும் போது, மனிதருக்கு ஒரு தீங்கும் செய்யாது; ஆனால் அதை அழிப்பதற்கு உடலில் இயற்கையாகத் தோன்றும் பிறபொருள் எதிரியைத் தோற்றுவிக்கும். இந்தப் பிறபொருள் எதிரி இதே புறத் தோற்றம் கொண்ட வைரஸ்களைத் தாக்கி அழிக்கும். எனவே, எந்த வைரஸுக்கு எதிராகப் பாதுகாப்புத் தேவைப் பட்டதோ அந்த வைரஸ் உடலில் புகும் போது இந்த பிறபொருள் எதிரி அதனைத் தாக்கி அழித்து விடும். இந்தக் காய்ச்சல் வைரஸ்களின் புறத் தோற்றம் மாறுபடுவதாலும், இந்தப் புறத் தோற்றம் அவ்வப் போது மாறுவதாலும் எல்லா வகைக் காய்ச்சல் வைரஸ்களுக்குமென ஒரு குறிப்பிட்ட தடுப்பூசியைத் தயாரிக்க முடியாது. இதுதான் இப்போதைய நிலவரம்.
சரி அப்படியாயின், இப்போது இந்த புதிய வழி முறை எப்படி இதைச் சாதிக்கிறது? இங்கு தான் உயிர் மூலக்கூறுகள் கை கொடுக்கின்றன. மனிதருக்கு இருக்கும் DNA போல வைரஸ்களுக்கு இருப்பவை RNA மூலக்கூறுகள். இந்த RNA மூலக் கூறுகள் தாமாகவே பிரிவடைந்து இனப் பெருக்கம் செய்ய மாட்டா. எனவே தான் வைரஸ்கள் உடலுக்குள் புகுந்து உயிரணுக்களுக்குள்ளே (cells) சென்று அந்த உயிரணுக்-களுக்குள்ளே இருக்கின்ற DNAஐப் பயன் படுத்தி தங்களின் இனவிருத்தியைச் சாதிக்கின்றன. புதிய வழிமுறை வைரஸின் புறத் தோற்றத்தில் தங்கி இருக்கவில்லை. மாறாக வைரஸின் உள்ளே இக்கின்ற RNAஐக் கொண்டு இது தொழில்படுகிறது.
ஒரு காய்ச்சல் வைரஸை எடுத்து அதனுடைய சில RNA பகுதிகளை நீக்கி விடுகிறார்கள். பின்னர், இவை உடலுக்குள் பாய்ச்சப் படுகிறன. உடலினுள் செல்லும் இந்த வைரஸ், உயிரணுக் களுக்குள் சென்று வாழும். ஆனால், தம்மைத் தாமே பெருக்குக் கொள்ளமாட்டா; ஏனெனில், அவற்றிலிருந்து சில RNAக்கள் ஏற்கனவே நீக்கப் பட்டு விட்டன. நோயைத் தோற்றுவிக்கும் ஒரு வைரஸ் இந்த உயிரணு-வுக்குள் வரும் போது இந்த வைரஸின் RNAஐக் கொண்டு முதலில் நாம் அனுப்பிய RNA குறைந்த வைரஸ் தன்னைதானே பெருக்குக் கொள்ளத் தொடங்கும். இதனது வேகம் நோயைத் தோற்றுவிக்கும் வைரஸை விட அதிகமாக இருப்பதால், இந்த பாதகமில்லா வைரஸ்கள் அந்த உயிரணு முழுவதும் நிறைந்து நோய் தரும் வைரஸ் பெருகுவதைத் தடுக்கின்றன!
எல்லாம் சரி. இதை எப்படி உடம்புக்குள் செலுத்துவது? இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், தடுப்பூசி முறையில் உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையில் நாம் தங்கி இருக்கிறோம். எனவே அந்த நோய் எதிர்ப்புத் தன்மை வந்து விட்டால், அது ஏறத்தாழ வாழ் நாள் முழுவதும் பயனளிக்கும். ஆனால், இந்தப் புதிய வைரஸ் முறையில் நாம் ஒரு வைரஸில் முழுமையாகத் தங்கி இருக்கிறோம். அப்படியாயின், வைரஸின் வாழ் நாள் வரைக்கும் தான் எங்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். ஏறத்தாழ ஒரு ஆறு வாரங்கள். அப்படியானால், வைரஸை உடலினுள் செலுத்த சிறந்த வழி என்ன? Nasal spray! இதை மூக்கினுள் செலுத்தினால் ஆறு வாரங்களுக்கு எங்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். சரி. காய்ச்சல் வந்து விட்டது என்ன செய்வது? அறிகுறிகள் ஆரம்பித்த 24 மணிநேரத்திற்குள் இதைப் பயன்படுத்தினால் போதும். பலன் கிடைக்கும்.
"அட்டா! நல்ல மருந்தாயிற்றே! எங்கே இது கிடைக்கும்?" என்கிறீர்களா? இது இப்போது இங்கிலாந்திலுள்ள வொரிக் பல்கலைக் கழகத்தின் ஆய்வுகூடத்தில் மிருகங்களில் பயன் படுத்திப் பார்த்திருக்கிறார்கள். இதை இனி nasal spray வடிவில் உற்பத்தி செய்து, பின்னர் மனிதரிடையே சோதனைகளுக்கு விட்டு அதன் பின்னர்தான் புழக்கத்துக்கு வரும். இதற்கு இன்னும் 5-10 ஆண்டுகள் ஆகலாம். காத்திருப்போம்.
8 :
வாசா
என்ன மாதிரி தகவல்களை கொடுக்கிறீர்கள்..
உங்களைப்போல் இன்னும் பலர் வந்து இந்த மாதிரி உருப்படியான தகவல்களை கொடுக்க வேண்டும்.
நல்ல அருமையான பதிவு.
வளர்க உங்கள் பணி.
hey vaisa.. romba nalla pathivuai irukku..keep rocking
10 வருசம்தானே? காத்திருந்தால் போச்சு. அதுவரை காய்ச்சல் வராம இருக்கணும்:-)
நல்ல பதிவு
//இதற்கு இன்னும் 5-10 ஆண்டுகள் ஆகலாம். காத்திருப்போம்.///
காத்திருக்கலாம்...:)))))) நான் சொல்ல நினைத்ததை பின்னூட்ட நாயகி சொல்லிட்டாங்க...
நல்ல பதிவு..
வைசா!
பயனுள்ள பதிவு;படிக்கச் சந்தோசமாக இருக்கிறது.எனக்கிது பயன்படுமோ தெரியல, யாருக்கோ கட்டாயம் பயன்படும் அதுவே!!!நன்றே!!
யோகன் பாரிஸ்
வைசா,
மிக அருமையான பதிவு!!
தொடரட்டும் இந்த மேலான பணி.
வைசா,
அருமையான, மிகவும் பயனுள்ள பதிவு. மருத்துவ, தொழிநுட்பக் கட்டுரைகள் அவ்வளவாகத் தமிழில் வருவதில்லை. அழகாக நேர்த்தியாகச் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் பதிவில் சொல்லியுள்ள பல கருத்துக்களை நான் இதுவரை அறிந்திலேன். படித்துப் பயன் பெற்றேன். மிக்க நன்றி. தொடர்ந்தும் இப்படியான பதிவுகளைத் தாருங்கள்.
சுவையான ஆராய்ச்சி விவரங்கள். தமிழில் படிக்கக் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.
இந்த வருட நோபல் பரிசுகளில் உயிரியியல், வேதியியல் இரண்டு பிரிவுகளிலுமே செல்லியல் தொடர்பான பணிகளுக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்கள் அல்லவா? அந்த ஆராய்ச்சிகளைப் பற்றியும் எழுதுவீர்களா?
அன்புடன்,
மா சிவகுமார்