நாம் வாழும் ஒவ்வொரு நாளும் இந்தப் பூமியிலிருந்து மூலவளங்களைப் பயன்படுத்துகிறோம். இங்கு பூமி என்ற பதம் எல்லா இயற்கை வளங்களையும் குறிக்கிறது.பூமியும் அவ்வாறு எடுக்கப்படும் மூலவளங்களை மீள உருவாக்கவோ அல்லது நாம் பயன்படுத்தும் வேகத்தில் அதைத் தருவதற்கோ முயலும். எமது கழிவுப் பொருள் களையும் தன்னுளே ஏற்றுக் கொள்கிறது. ஆனால் எமது தேவைகள் அதிகரிக்க, எமது கழிவுப் பொருள்கள் அதிகரிக்க பூமியின் இந்த இயல்பு ஒரு கட்டத்தில் இயலாமல் போய்விடும். அதாவது மூலவளங்களை மீட்டெடுக்க முடியாது. போடப்படும் கழிவுப் பொருள்களும் உள்ளெடுக்கப் படமாட்டா.
ஒரு மனிதத்தொகைக்குத் தேவையான மூலவளங்களை உற்பத்தி செய்வதற்கும் வெளியாகும் கழிவுப் பொருள்களை உள்ளெடுப்பதற்கும் தேவைப்படும் நிலம், நீர் ஆகியவற்றை அளப்பதன்மூலம் இயற்கைச் சூழலின் காலடிகளை நாம் மதிப்பிடலாம். இவ்வாறு Global Footprint Network (http://www.footprintnetwork.org/) என்ற நிறுவனம் இந்தக் கணிப்புகளைச் செய்துள்ளது. இதன்படி "கடன்" நாள் என்று ஒன்றைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது ஓர் ஆண்டு முழுவதும் பூமியின் மூல வளங்களை அளவாகப் பயன்படுத்தியிருந்தால் "கடன்" நாள் என்று ஒன்று இருக்காது. ஆனால், மூலவளங்களை பூமி மீள உற்பத்தி செய்யும் ஆற்றலை விட வேகமாக இவற்றை நாம் பயன்படுத்தினால் "கடன்" நாள் என்று ஒன்று வரும். உதாரணமாக, இந்த "கடன்" நாள் டிசெம்பர் 19 என்றால், இந்தத் தேதிக்குப் பின்னர் நாம் பயன்படுத்தும் மூல வளங்கள் எல்லாம் பூமியிலிருந்து சுரண்டுவதாகிறது. 1987ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் எந்த நாள் இது என்று கீழே பாருங்கள்:
1987 - டிசெம்பர் 19
1990 - டிசெம்பர் 7
1995 - நவம்பர் 21
2000 - நவம்பர் 1
2005 - அக்டோபர் 11
2006 - அக்டோபர் 9
1961ம் ஆண்டில் பூமி தரக் கூடிய மூலவளங்களில் 80% மட்டுமே பயன்படுத்தியிருக்கிறோம். 2002ல் தேவைகள் 120% ஆக அதிகரித்தது.
இப்போது 2006ல் ஏறத்தாழ 150% ஆகிவிட்டது. அமெரிக்காவுக்கு பூமி தரக் கூடிய அளவில் 5.3 மடங்கு கூடுதலாகத் தேவைப்படுகிறது. பிரிட்டனுக்கு 3.1 மடங்கு தேவைப்படுகிறது. இந்தியாவுக்கு 0.4 மடங்குதான் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் எவ்வளவு மூல வளங்கள் தேவைப்படுகின்றன என்று பார்த்தால், வட அமெரிக்கா ஆபிரிக்கா-வுக்குத் தேவையானதை விட 9 மடங்கு கூடுதலாகப் பயன்படுத்துகிறது.
சரி. இதை இன்னும் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்ப்போம். எந்த எந்த நாடுகள் தங்களிடமுள்ள மூலவளங்களுக்குள் தமது தேவைகளை வைத்திருக்கிறார்கள் (பச்சை), எந்த எந்த நாடுகள் தங்கள் மூலவளங்-களுக்கும் மேலாகப் பயன்படுத்துகிறார்கள் (சிவப்பு) என்று பார்த்தால், வளர்ந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையேயுள்ள மாபெரும் வேறுபாடு தெரிய வருகிறது.
ஆகவே, இந்த ஆய்விலிருந்து இரண்டு விடயங்கள் தெரிய வருகின்றன. முதலாவது, போதுமானளவு நிலம், நீர் உணவு என்பன இல்லாத லட்சக்கணக்கான மக்களுக்கு அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மறுக்கப் படுகின்றது. இரண்டாவது, இந்த வேகத்தில் பூமியின் மூலவளங்களை நாம் பயன்படுத்துதல் பூமியின் உயிர்காக்கும் தன்மைகளை ஆபத்தில் கொண்டு போய்விடுகிறது.
3 :
வைசா
நன்றாக தொகுத்துள்ளீர்கள்.. அருமை..
இந்த வருடம் கடன் "அக்டோபர் 9"....ம்ம்ம்ம்.. வருத்தமளிக்கும் விசயமே...
இந்தியாவும் சிகப்பா!!???... ம்ம்ம்ம்ம்... என்னமோ போங்க....
பதிவுக்கு நன்றி
மிக நல்ல கணிப்பு ,இந்நிலை தொடர்ந்தால்; ஜனவரி ஒன்றே!! கடன் நாளானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.எதிர்காலம் பற்றிய உணர்வே இல்லை.
நன்றி
யோகன் பாரிஸ்
//அமெரிக்காவுக்கு பூமி தரக் கூடிய அளவில் 5.3 மடங்கு கூடுதலாகத் தேவைப்படுகிறது. பிரிட்டனுக்கு 3.1 மடங்கு தேவைப்படுகிறது.//
வைசா,
ரொம்ப அவசியமானதொரு தொகுப்பு. இந்த குட்டியுண்டு நாடுகளைப் பாருங்களேன்... டிமாண்ட் எந்த அளவிற்கு இருக்கிறது என்று.
இந்த லட்சனத்தில் மக்கட் பெருக்கம் வேறு பிலு பிலுவென்று எகிறிக் கொண்டுள்ளது. இதுவே ஒரு அணு ஆயுதத்திற்கு சமம்தான் போல உள்ளது. இன்னும் இந்தியாவும், சீனாவும் - மேற்கத்திய கலாச்சார USE and THROW attitudeயை முழுமையாக செயல் படுத்த ஆரம்பித்தால், ஹூம்...
கொஞ்சம் இதனையும் படித்துப் பாருங்கள்...
By the way Vaisa, I have been reading all your posts, the only thing is, I am a bit lazy to scrap a note :-). Good work from your side... keep the good work. Thanks.