புறாக்களுக்கு எதிராக ஒரு போர்

நான் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டு இருந்த காலத்தில் ஒரு சீனத்து நண்பி லண்டனில் சுற்றிப் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றிக் கேட்டாள். அவள் லண்டன் வந்து ஓரிரு மாதங்கள் தான் இருக்கும். நான் எனக்குத் தெரிந்தவரை ஒரு பட்டியலை அடுக்கிக் கொண்டு போனேன். பாராளுமன்றக் கட்டிடம், பிக் பென், டவர் பாலம், ட்ரஃபால்கர் சதுக்கம், பக்கிங்ஹாம் மாளிகை, மாபிள் ஆச், மொனுமென்ட், ஹைட் பூங்கா.... பட்டியல் நீண்டு கொண்டே போனது. கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்தவள் நான் சொன்னதில் திருப்தி அடையாமல், "புறாச் சதுக்கத்தைக் குறிப்பிட வில்லையே? அது எங்கே இருக்கிறது?" என்றாள். அப்படியொரு சதுக்கமே லண்டனில் கிடையாது. அவளோ லண்டனுக்கு வந்து விட்டுச் சீனாவுக்குத் திரும்புவோரெல்லாம் புறாச் சதுக்கத்தின் பெருமைகளைப் பேசுவார்கள் என்றும் லண்டனுக்குப் போனால் அதை தவறாமல் பார்க்க வேண்டுமென்று அவர்கள் கூறினார்கள் என்றும் சொன்னாள். சற்று நேரம் யோசித்தேன். ட்ரஃபால்கர் சதுக்கத்தில் புறாக்கள் பல உண்டு. இந்தச் சதுக்கமாகத்தான் இருக்குமென்று அவளிடம் கூறினேன். அவளுக்குத் திருப்தி ஏற்பட வில்லையாயினும் போய்விட்டாள். சில நிமிடங்களில் திரும்பி வந்த-வளின் முகத்தில் ஆனந்தம் தாங்கவில்லை. "அதேதான். அதேதான். ட்ரஃபால்கர் சதுக்கம் தான்" என்றாள்.


இது நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் இந்த ட்ரஃபால்கர் சதுக்கமும் புறாக்களும் இணை பிரியாது இருக்கின்றன. ஊரிலே சென்ற இடமெல்லாம் காகங்கள் இருப்பது போல, லண்டனில் எல்லா இடமும் புறாக்களின் அட்டகாசம் தாங்க முடியாது. ரயில் நிலையங்கள், பாதாள ரயில் நிலையங்கள் என்று எல்லா இடங்களிலும் இவற்றின் தொல்லைதான். கென் லிவிங்ஸ்டன் லண்டனின் மேயராகப் பதவி யேற்ற பிறகு 2003ல் புறாக்களுக்கு எதிராகப் போர் தொடுத்தார். எதற்காக? புறாக்கள் வருவோருக்குத் தொந்தரவானவை, உடல் நலத்திற்குத் தீங்கானவை. இவைதான் அவர் கூறும் காரணங்கள்.



முதலாவதாக, உல்லாசப் பயணிகளும் லண்டன்வாசிகளும் (முக்கிய-மாக லண்டன் வயோதிபரும்) புறாக்களுக்கு ட்ரஃபால்கர் சதுக்கத்தில் தீனி போடுவதைத் தடை செய்தார். இதையடுத்து, புறாக்களுக்கான உணவுகளை உல்லாசப் பயணிகளுக்கு விற்பனை செய்யும் பெட்டிக் கடைகளுக்கு மூடு விழா செய்தார். ஆனால், புறாக்களைப் பட்டினி போட்டதாக மிருகநல தாபனங்கள் பொங்கியெழும் என்பதால், ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு 25 கிலோ தானியங்களை புறாக்களுக்கு உணவாக அளிக்க ஏற்பாடு செய்தார். ஊஹும். மேயர் தரும் தீனி போதுமோ என்னவோ புறாக்கள் அசைந்த பாடில்லை. ஏறத்தாழ 4000 புறாக்கள் ட்ரஃபால்கர் சதுக்கத்தில் மகிழ்ச்சியாக குடித்தனம் நடத்தி வந்தன. மேயர் அடுத்த ஆயுதத்தை ஏவினார். பருந்துகள் சிலவற்றை வாங்கி வந்து ட்ரஃபால்கர் சதுக்கத்தில் குடியேற்றினார். இந்தப் பருந்துகளைப் பார்த்தாவது புறாக்கள் பயந்-தோடட்டும் என்பது அவர் எண்ணம்.


இந்த இரண்டாவது உபாயம் ஓரளவுக்கு வெற்றியளித்தது. ஏறத்தாழ 250 புறாக்களை இப் பருந்துகள் வேட்டையாடி உண்டுமகிழ்ந்தன. 2500க்கும் மேற்பட்ட புறாக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று தங்கள் பரம்பரைச் சொத்தை வேண்டாமென்று உதறித் தள்ளிவிட்டு எங்கோ ஓடிப் போய் விட்டன. ஆனாலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறாக்கள் இன்னும் ட்ரஃபால்கர் சதுக்கத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கின்றன. என்ன செய்தும் அசைகிறபாடில்லை.



சரி இத்தனை செய்தாகி விட்டதே, இதற்கு எவ்வளவு செலவாயிற்று? இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் பவுண்டுகள்! எல்லாம் லண்டன் வாழ் மக்கள் கட்டிய வரிப்பணத்திலிருந்துதான்.

(படங்கள்: இணையத்திலிருந்து)

5 :

  1. வைசா,
    நல்ல பதிவு.

    //ஆனாலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறாக்கள் இன்னும் ட்ரஃபால்கர் சதுக்கத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கின்றன. என்ன செய்தும் அசைகிறபாடில்லை.//

    துணிவான இப் பறவைகள் அய்யன் வள்ளுவனின் குறள் வழி நிற்கின்றன போலும். நாம் இந்தப் புள்ளினங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.

    இடும்பைக்கு இடும்மை படுப்பர் இடும்பைக்கு
    இடும்பை படாஅ தவர்.

    அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கண் படும்.

    இடுக்கண் வருங்கால் நகுக அதனை
    அடுத்தூர்வது அஃதொப்பது இல்

  2. இதை படித்தவுடன், இங்கு கார்களின் மேல் "ஆய்" போய் அசுத்தப்படுத்துவதாலும்,பல காகங்கள் மற்றும் புறாக்களும் துப்பாக்கிக்கும் விஷ சாப்பாட்டுக்கு பலி ஆகின்றன.
    நாம் வாழ ...லை

  3. வைசா

    நல்ல பதிவு

    நன்றி

  4. வைசா!
    இங்கும் இப்புறாத் தொல்லையென;மாநகரசபை நடவடிக்கையெடுத்து;மிருக ஆர்வலர்கள்; வேண்டுகோளின்படி;பிடித்து பலனூறு கிலோமீற்றருக்கு அப்பால்;விடுவதெனத் தீர்மானமெடுத்து;பின் இவர்களே குறிப்பிட்ட இடங்களில் கூடு கட்டிவைத்து;இனப்பெருக்க காலங்களில் அவற்றின் உண்மையான முட்டைகளை எடுத்துவிட்டு; போலி முட்டிடைகளை வைத்து; இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது மாத்திரமன்றி; பின்போட்டு கட்டுக்குள் வைத்துள்ளதாக கூறினார்கள்.குறைந்துள்ளது போல் தான் இருக்கிறது.
    யோகன் பாரிஸ்

  5. புறா ஆரிய புறாவா? திராவிட புறாவா?