மைக்கல் ஷூமக்கர் - படங்கள்

நேற்று நடந்து முடிந்த இந்த ஆண்டுக்கான இறுதி F1 கார் ஓட்டப் போட்டியுடன் உலகின் தலைசிறந்த F1 காரோட்டுனரான மைக்கல் ஷூமக்கர் ஓய்வு பெறுகிறார். அவரது F1 வாழ்வின் சில படங்கள் இங்கே.
1991ம் ஆண்டு பெல்ஜியம் பந்தயத்தில் ஜோர்டன் அணிக்காக தனது F1 பயணத்தைத் தொடங்கினார். கார் பழுதடைந்தமையால் முதலாவது சுற்றிலேயே அவரது ஓட்டம் முற்றுப் பெற்றது.

1992ல் பெனெட்டோன் அணிக்குத் தாவி, பெல்ஜியத்தில் ஒரு மழைநாளில் தனது முதலாவது F1 வெற்றியை தழுவினார். அந்த ஆண்டு தொடரில் மூன்றவது இடத்தில் முடித்தார்.
1993ல் அந்த ஆண்டு தொடரில் வெற்றி பெற்ற அலெய்ன் ப்ரொஸ்டையே போர்த்துக்கல் பந்தயத்தில் தோற்கடித்தார்.
1994ல் F1ன் தலைசிறந்த காரோட்டுனரான அயட்டன் சென்னா இத்தாலியில் நடந்த பந்தயத்தில் உயிரிழந்தார். முதல் நான்கு பந்தயங்-களிலும் ஷூமக்கர் தான் வெற்றி.
பெனெட்டோன் கார் வில்லியம்ஸ் காரை விட சற்றே வேகங் குறைவானதாக இருந்த போதிலும் அந்த ஆண்டு முழுவதும் நன்றாக ஓடி எட்டுப் பந்தயங்களில் வென்று ஒரு புள்ளி கூடுதலாகப் பெற்று தொடரில் வெற்றி பெற்றார்.
இறுதிப் போட்டியில் டேமன் ஹில்லின் வில்லியம்ஸ் காரும் ஷூமக்கரின் பெனிட்டோன் காரும் மோதிக் கொண்டன. வேண்டுமென்றே மோதியதாக டேமன் ஹில் குற்றம் சாட்டினார்.
1995ல் எந்த விதமான சந்தேகத்துக்கும் இடமில்லாமல் ஷூமக்கர் தொடரில் வெற்றிவாகை சூடினார்.
1996ல் ஃபெராரி அணிக்குத் தாவி பலரை ஆச்சரியப்பட வைத்தார். 1979க்குப் பிறகு ஃபெராரி அணி F1 தொடரில் வென்றிருக்கவில்லை.
ஃபெராரி காரின் பல பிரதிகூலங்களையும் தனது திறமையால் மறைத்து 1996ல் மூன்று பந்தயங்களில் வெற்றி பெற்று தொடரில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
1994ம் ஆண்டு போலவே, 1997லும் இறுதிப் பந்தயத்தில் தனது எதிரிக் காரை அடித்து மோதி வெற்றி பெற முயன்றார். அதில் தோல்வியும் தழுவினார். அதில் குற்றவாளியாகக் காணப்பட்டு, அந்த ஆண்டு அவர் பெற்ற அத்தனை புள்ளிகளையும் இரண்டாவது நிலையையும் இழந்தார்.
1998ல் ஆறு பந்தயங்களை வென்றிருந்தும், தொடரில் இரண்டாவதாகவே முடித்தார். வென்றவர் மக்லாரன் காரை ஓட்டிய மிக்க ஹக்கினன்.
1999ல் பிரிட்டிஷ் பந்தயத்தில் தனது காலை உடைத்து இரு பந்தயங்களில் பங்கு பற்றமுடியாமற் போனார். மீண்டும் ஓட வந்தாராயினும், மிக்க ஹக்கினன் தான் மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால் கார் என்ற வகையில் ஃபெராரி முதலிடத்தைத் தட்டிச் சென்றது.
2000ம் ஆண்டு நடந்த 17 பந்தயங்களில் பத்தில் வென்று மூன்றாவது முறையாக வெற்றிவாகை சூடினார்.
2001லும் தொடரில் வெற்றி பெற்றார்.
2002 தொடரிலும் ஷூமக்கரே வெற்றி பெற்றார். ஆனால், ஆஸ்திரேலியாவில் நடந்த பந்தயத்தில் அவரது சக காரோட்டுனர் ரூபன் பரிக்கலோவை கடைசி முளையில் வைத்து முந்தும்படி ஃபெராரியினர் செய்தனர். இது பலரது விமர்சனங்களுக்கு ஆளானது.
2003 தொடரில் மற்ற ஆண்டுகளைவிட சற்று விறுவிறுப்பாக இருந்த போதிலும் ஷூமக்கரே மீண்டும் வெற்றி பெற்றார்.
2004ல் தனது வாழ்வில் ஏழாவது முறையாக வெற்றி பெற்றார். நடந்த 18 பந்தயங்களில் பதின்மூன்றில் வென்று சாதனை படைத்தார். மொத்தம் 148 புள்ளிகளை அவர் குவித்தார்.
2005ல் ரெனோ காரின் பெர்னாண்டோ அலொசோவிடம் தோற்றார். சில்லுகளின் பாதுகாப்பின்மை காரணமாக ஆறு கார்களைத் தவிர ஏனைய கார்கள் (அலொன்சோவின் கார் உட்பட) பங்குபற்றாத அமெரிக்கப் பந்தயத்தில் மட்டுமே ஷூமக்கர் வெற்றி பெற்றார்.
இந்த ஆண்டில் மேலுமொரு முட்டாள்தனமான வேலையை செய்தார். மொனொகோ பந்தயத்தின் தகுதி பெறும் சுற்றின் முடிவில் ஒரு மூலையில் திடீரென்று காரை நிறுத்தி வத்தார். பின்னால் வந்த எவரும் தமது தகுதிகளை முன்னேற்றிக் கொள்ள முடியாமல் செய்துவிட்டார். இதற்காக அவர் தண்டிக்கப்பட்டு இறுதிக் காராக பந்தயத்தை ஆரம்பித்தார்.
இத்தாலியில் நடைபெற்ற பந்தயத்தில் வெற்றி பெற்றார், இது இவரது 90ஆவது பந்தய வெற்றி. சில பந்தயங்களே வரவிருக்கும் இந்நிலையில் அவர் அளொன்ஸொவை விட 2 புள்ளிகள் மட்டும் குறைவாக இருந்தார்.
ஷூமக்கரும் அலொன்சோவும் சமமான புள்ளிகளைக் கொண்டிருக்கும் போது, கடைசிக்கு முதல் பந்தயமான ஜப்பான் பந்தயத்தில் அவரது காரின் எஞ்சின் பழுதடைந்தது.
அவர் ஓய்வு பெறும் முன் ஓடிய கடைசி பந்தயத்திற்கு முன் பிரேசில் நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் பெலே ஷூமக்கருக்கு ஒரு விருதினை வழங்கினார்.


நேற்று நடந்த அந்தப் பந்தயத்தில் சில்லுக் காற்றுப் போய்விட்ட காரணத்தால் இறுதிக்குப் போய்விட்ட ஷூமக்கர், பிரமாதமாக ஓடி நான்காவதாக முடித்தார். அவர் ஐந்தாவது இடத்தில் இருந்து நான்-காவது இடத்திற்கு வருவதற்கு மக்லாரன் கார் ஓட்டும் கிமி ரைக்கனனை முந்தியது நல்ல போட்டியாக இருந்தது. ஆயினும் இந்த ஆண்டுத் தொடரை அலொன்ஸொ 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றார்.

படங்கள்: பிபிசி

1 :

  1. சிறந்த பதிவு.

    நன்றி