இன்ஸமாமாமுக்கு எதிரான ஐசிசியின் விசாரணை

பாகிஸ்தான் அணித்தலைவர் இன்ஸமாம் உல் ஹக்குக்கு எதிரான ஐசிசியின் விசாரணை எதிர் வரும் 27 - 28ம் திகதிகளில் இடம் பெறும் என ஐசிசி இன்று அறிவித்துள்ளது. கடந்த ஓவல் டெஸ்ட்டின் போது பாகிஸ்தான் அணியினர் பந்தை ஊனப்படுத்தினார்கள் என்று முடிவு செய்து நடுவர் டறில் ஹேயர் அந்தப் பந்தினை மாற்றியதோடு, இங்கிலாந்து அணிக்கு 5 ஓட்டங்களை கொடுத்தார். தேநீர் இடை வேளைக்கு பின்னர், இன்ஸமாமும் அணியினரும் ஆட வர மறுத்து ஒர் எதிர்ப்பைத் தெரிவித்ததை அடுத்து, இங்கிலாந்து அணி அந்த டெஸ்டில் வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர். 129 வருட டெஸ்ட் வரலாற்றில் இவ்வாறு ஒரு அணி விளையாட மறுத்ததால், மற்ற அணிக்கு வெற்றியைக் கொடுத்தது இதுவே முதல் தடவை. இதைத் தொடர்ந்து இன்ஸமாம் பந்தை ஊனப்படுத்தியதற்காகவும், ஆட்டத்தில் தொடர மறுத்து விளையாட்டின் கௌரவத்திற்குப் பங்கம் விளை-வித்ததற்காகவும் என இரு விடயங்களில் குற்றம் சாட்டப்பட்டார்.

நடுவர்கள் அவ்வாறான முடிவுக்கு வந்ததற்கு முதலாவது இன்னிங்ஸில் உணரப்பட்ட சம்பவம் காரணமாக இருக்கக் கூடும். முக்கியமாக அந்த வியாழக்கிழமை ஒரு 45 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட நிலையில் பந்து ஸ்விங் செய்ய ஆரம்பித்தது. இன்னிங்ஸின் முடிவில் அந்தப் பந்து ஊனப்படுத்தப் பட்டுள்ளதாக நடுவர்கள் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆக இதை மனதில் வைத்துக் கொண்டு தான் நடுவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 56 ஓவர்கள் வீசி முடிக்கப் பட்ட நிலையில் பந்து ஊனப்படுத்தப் பட்டுவிட்டதாக முடிவுக்கு வந்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது. எந்த ஒரு தனி நபராவதுபந்தை ஊனப்படுத்தும் போது நடுவர்களோ ஏனையோரோ காணவில்லை என்பதால் அணித் தலைவர் என்ற வகையில் இன்ஸமாம் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், தனது அணியினை ஆட்டத்திற்குக் கொண்டு செல்லத் தவறியதால் விளையாட்டின் கௌரவத்திற்குப் பங்கம் விளைவித்ததாக ஒரு பாரிய குற்றச் சாட்டினையும் இன்ஸமாம் மீது சுமத்தியுள்ளார்கள். இதில் குற்றவாளி யாகக் காணப்படுமிடத்து, இவர் 2-4 டெஸ்ட்களுக்கும், 4-8 ஒருநாள் பந்தயங்களுக்கும் தடை செய்யப் படக்கூடும். அவ்வாறு நடைபெறுமானால், ஏற்கனவே அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் சாம்பியன் விருதுக்கான போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணியின் தலைவராக இன்ஸமாம் நியமிக்கப் பட்டுள்ளமையால் அவ்வணி இப்போட்டிகளில் கலந்து கொள்ளுமா? இல்லையெனில், ஐசிசி அதற்கு மேற் கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கும்? இவையெல்லாம் நடப்பதற்கான சாத்தியங்கள் குறைவு போல் தான் தோன்றுகிறது.

மைதானத்தைச் சுற்றிலுமாக 25 கமராக்கள் இருந்தும் எந்த விதமான விடியோ ஆதாரங்களும் கிடையாது என்று இந்த டெஸ்ட் பந்தயத்தை நேரடி ஒளிபரப்பு செய்த ஸ்கை நிறுவனம் கூறிவிட்டது. ஆனால், இப்போதெல்லாம் பந்து வீச்சாளர்கள் தமது ஓட்ட ஆரம்பத்துக்கு நடந்து போகின்ற போது அதைக் காட்டுவது மிகவும் குறைந்து விட்டது. கிரபிக்ஸ் அல்லது பழைய சம்பவமொன்றின் விடியோ அல்லது நிபுணர் ஒருவரின் கருத்து என்று ஏதாவது ஒன்றை காட்டி நேரத்தை நிரப்பி விடுவார்கள். ஆக பந்து வீச்சாளர் என்ன செய்தார் என்பது விடுபட்டுப் போக வாய்ப்புண்டு. மேலும், நேரடி ஒளிபரப்பில் வரும் காட்சிகளைத் தவிர மற்ற கமராக்களில் இருந்து வரும் காட்சிகள் சேமித்து வைக்கப்பட்டிருக்க மாட்டா.எனவே, ஒட்டு மொத்தமாக விடியோவை முழுமையாக நம்ப முடியாது. எவ்வாறாயினும், விடியோ ஆதாரம் இல்லை என்பதாலேயே இந்தக் குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாது என்றும் நிபுணத்துவமான சோதனையின் மூலம் பந்து ஊனப்படுத்தப் பட்டதா என்று நிர்ணயிக்க முடியும் என்றும் ஐசிசியின் மல்கம் ஸ்பீட் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது. அப்படியாயின், அந்த ஆட்டத்தின் ரெபெரீ மைக் புரொக்டர் இந்த விசாரணையில் முக்கிய பங்கு வகிப்பார்.

இதனிடையே இன்னொரு காமடிப் பேச்சும் வெளியாகியிருக்கிறது. சம்பந்தப்பட்ட பந்தை விஞ்ஞானப் பரிசோதனைக்கு உட்படுத்த ஒரு யோசனை இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது. என்ன இவர்கள் கண்டு பிடிக்கப் போகிறார்கள்? அந்தப் பந்திலே அப்படி என்னதான் இருக்கும்? அழுக்கு, புல், சீமெந்து, விளம்பரப் பலகையிலிருந்து கொஞ்சம் பெயிண்ட், மனித தோல், வியர்வை, துப்பல், இனிப்புகளிலிருந்து வந்த சர்க்கரை, சன் கிறீம், மொயிஸ்சறைசர், தலைமயிருக்கான ஜெல், கால்சட்டையிலிருந்து வந்த நூல்கள். ஒருவேளை இதற்கு மேலாக அதற்குள் மாட்டிக் கொண்டிருக்கும் ஒரு நகத் துண்டு அகப்படக் கூடும்!! ரஞ்சன் மடுகல்ல விசாரணையை முடித்த பின் தான் ஏதாவ-தொரு வகையில் முடிவு தெரியவரும்.

0 :